திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு தினமும் விமானங்கள் இயங்கி வருகின்றன. அந்த வகையில் இன்று மாலையில் இன்று மாலை 5.40 மணிக்கு 141 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுடன் ஏர் இந்தியா ஏஎக்ஸ்பி 613 என்ற விமானம் சார்ஜா புறப்பட்டு சென்றது. விமான நிலையத்தின் ஓடுதளத்தில் இருந்து மேலே பறந்த விமானத்தின் லேண்டிங் கியரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானங்களின் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை. ஹைட்ராலிக் பிரச்சனை ஏற்பட்டதால் சக்கரங்களை உள்ளே இழுக்க முடியாமல் விமானம் பறந்துள்ளது. இதையறிந்த விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். விமானத்தை அவசரமாக தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த விமானம் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் வட்டமடித்து கொண்டிருந்தது. விமானத்தில் அதிகளவில் எரிபொருள் இருந்தது.
அவசர தரையிறக்கம் செய்யும்போது விமானத்தில் அதிகளவிலான எரிபொருள் என்பது இருக்க கூடாது. அப்படி இருந்தால் அவசர தரையிறக்கத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும்போது தீப்பிடிக்க அதிக வாய்ப்பு இருக்கும். இதனால் எரிபொருளை செலவழிக்க விமானம் வானில் வட்டமடித்தது.சுமார் 2.30 மணிநேரம் வானில் வட்டமடித்த விமானம் எமர்ஜென்சி முறையில் பத்திரமாக திருச்சி விமான நிலையத்தில் இரவு 8.30 மணிக்கு பத்திரமாக தரையிறங்கியது. முன்னதாக விமானப் பயணிகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையத்தில் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. குடியரசுத் தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரும் வழியானது திறக்கப்பட்டு, அந்த வழியாக ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட உள்ளன. விமானத்தில் இருக்கும் பயணிகளுக்கு அச்சம், பதட்டம் உள்ளிட்டதே காரணமாக உடல் நலக்குறைவு ஏதாவது ஏற்பட்டால் உடனடியாக அவர்களுக்கு முதலுதவி செய்ய மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்கிறது.
இந்நிலையில் இரவு சுமார் 8.30 மணியளவில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. இதனையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள், அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர். தொடர்ந்து பிபி சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருந்துகளை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு வேண்டிய உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் விமான பயணிகள் அனைவரும் விடியற்காலை மூன்று முப்பது மணி அளவில் வேறு விமானத்தின் மூலம் ஷாஜாவுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இந்த சூழ்நிலையில் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்கள் திருச்சி விமான நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.