திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய ஜனநாயக கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தலைவர் டாக்டர் ப.ரவிபச்சமுத்து தலைமை வகித்து கோரிக்கைகள் குறித்து பேசினார். மேலும் நாமக்கல்லில் இருந்து தொட்டியம் வழியாக நம்பர் ஒன் டோல்கேட் வரை ரயில்வே இருப்பு பாதை அமைக்க வேண்டியும், கோரை மற்றும் கொடிக்கால் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு தனி நல வாரியம் அமைக்க வலியுறுத்தியும், நாமக்கல் பகுதியில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு நாமக்கல்லில் இருந்து சமயபுரம் வரை சாலையில் தனி நடைப்பாதை அமைக்க வேண்டும், மாயனூர் தடுப்பணையிலிருந்து காவிரி நீரை தொட்டியம் பகுதியில் உள்ள ஏரிகளுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்,
தொட்டியம் – லாலாபேட்டை இடையே காவிரியில் தடுப்பணை அமைக்க வேண்டும், தொட்டியம் பகுதியில் அரசு மகளிர் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து தொட்டியம் வட்டாட்சியர் சேக்கிழாரிடம் கோரிக்கை மனுவினை அவர் அளித்தார்.அப்போது ரவிபச்சமுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில் நாமக்கல்லில் இருந்து துறையூர் மற்றும் தொட்டியம் வழியாக திருச்சி பகுதிக்கு ரயில் பாதை திட்டம் அமைப்பதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். தொட்டியம் பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளான தொட்டியம் லாலாபேட்டை இடையிலான காவிரியில் தடுப்பணை மற்றும் கோரை வெற்றிலை பயிரிடும் விவசாயிகளுக்கு தனி நல வாரியம் அமைக்க இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம்,
கடந்த ஐந்து ஆண்டுகளாக பெரம்பலூர் மக்களவை தொகுதி எம்பி யாக பணியாற்றிய பாரிவேந்தர் என்கிற பச்சமுத்து அவர் இருந்தபோது பாராளுமன்ற கூட்டத்தில் தொட்டியம் பகுதி விவசாயிகளின் கோரிக்கைகளை எடுத்து கூறி வந்த நிலையில், அப்போது இருந்த அரசியல் சூழ்நிலையில் செயல்படுத்த முடியவில்லை, தற்போது இதற்கான போராட்டத்தை அகில இந்திய ஜனநாயக கட்சி சார்பில் முயற்சி செய்து வருகிறோம் என்றார். இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக தொட்டியம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.