திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளில் வேதா ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் 1700 தூய்மை பணியாளர்களும் 300 ஓட்டுநர்களும் ஒப்பந்த அடிப்படையில் மாநகராட்சி வார்டுகளில் தூய்மை பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்தத் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் தற்போது வரை அறிவிக்கப்படாமல் உள்ளது இது குறித்து வேதா நிறுவனத்திடம் பலமுறை சென்று கேட்டும் அதற்கான உரிய பதில் வராததால் இன்று மாலை திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி ஆணையரிடம் புகார் அளிக்க வந்தனர். ஆனால் மாநகராட்சி மேயர் உட்பட கமிஷனர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இன்று தமிழக முதல்வர் திருச்சிக்கு வருகை தந்ததால் அங்கு சென்று விட்டனர். இதனால் அதிகாரிகளுக்காக நீண்ட நேரமாக காத்திருந்த தூய்மை பணியாளர்கள் சி ஐ டி யு மாநகர தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் இளையராஜா தலைமையில் திருச்சி மாநகராட்சி தலைமை அலுவலகம் முன்பு தரையில் படுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் பொருளாளர் டொமினிக் நிர்வாகிகள் பிரியா சின்ன பொண்ணு ராமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த போராட்டம் குறித்து சி ஐ டி யு மாநகர தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மாறன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- வேதா ஒப்பந்த நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை பணியாளர்களாக பணிபுரிபவர்களுக்கு தினமும் 751 ரூபாய் கூலி வழங்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது ஆனால் வேதா ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் தூய்மை பணியாளர்களுக்கு 650 ரூபாய் ஒப்பந்தம் செய்யப்பட்டது ஆனால் அவர்களுக்கு 575 ரூபாய் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தூய்மை பணியாளர்களிடமிருந்து தினமும் 75 ரூபாய் என 2000 பேரிடம் வேதா ஒப்பந்த நிறுவனம் பிடித்தம் செய்ததன் மூலம் வருடத்திற்கு பல கோடி ரூபாய் கொள்ளை அடிப்பதாக தூய்மை பணியாளர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய போனஸ் தற்போது வரை வழங்கப்படவில்லை அதற்கான எந்த ஒரு அறிவிப்பும் அறிவிக்கப் படவில்லை. தற்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கடந்த வாரத்தில் சென்னையில் பெய்த மழையில் பேரிடர் காலத்தில் பணிபுரிந்த தூய்மையாக பணியாளர்களுடன் டீ குடித்து உள்ளீர்கள் உணவு அருந்தி உள்ளீர்கள் மேலும் அவர்களுக்கு 2000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி உள்ளீர்கள் நாங்கள் கேட்பது ஊக்கத் தொகை அல்ல எங்களின் உரிமை தொகை அதை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை திருச்சி மாநகராட்சி முன்பு தூய்மை பணியாளர்களின் இந்த போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.