திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் வகித்தனர் . இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் பாலு நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அதிமுக மாநகராட்சி தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி பேசுகையில்:-
திருச்சி பஞ்சப்பூரில் ரூ.349.98 கோடியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம், பல்வகை பயன்பாட்டு வசதிகள் மையம், கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் இதர உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 93 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டது. மீதமுள்ள பணிகள் விரைந்து நடைபெற்று விரைவில் திறப்பு விழா காண உள்ளது. இந்நிலையில் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்திற்கு கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம், கனரக சரக்கு வாகன முனையத்திற்கு பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையம் என பெயர் சூட்ட அரசின் அனுமதி பெற கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் புதிய முனையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பெயரை சூட்ட வேண்டும் என அதிமுக சார்பில் கவுன்சிலர்கள் அம்பிகாபதி மற்றும் கவுன்சிலர் அரவிந்தன் ஆகியோர் மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் வலியுறுத்தினர்..