தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், பயணிகளின் நலன் கருதியும் திருச்சி மாநகரில் 28.10.2024ம்தேதி முதல் 04.11.2024ம்தேதி வரை தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் மதுரை மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் கீழ்கண்ட தற்காலிகப் பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப் படவுள்ளது. தஞ்சாவூர் மார்க்கம் டி.வி.எஸ்.டோல்கேட் – தலைமை தபால் நிலையம் செல்லும் பேருந்துகள் முத்தரையர் சிலை சேவா சங்கம் பள்ளி பென்வெல்ஸ் சாலை அலக்ஸாண்டிரியா சாலை சோனா மீனா தியேட்டர் எதிரில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படவுள்ளது.புதுக்கோட்டை மார்க்கம் செல்லும் பேருந்துகள் டி.வி.எஸ்.டோல்கேட்- சுற்றுலா மாளிகை சாலை- பழைய ஹவுசிங் யூனிட்- இலுப்பூர் சாலையில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படவுள்ளது. மதுரை மார்க்கம் செல்லும் பேருந்துகள் மன்னார்புரம் சர்வீஸ் சாலையில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படவுள்ளது.

தென் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மார்க்கத்திலிருந்து, திருச்சி மாநகர் வழியாக சென்னை செல்லும் அரசுப் பேருந்துகள், மன்னார்புரம் வந்து பயணிகளை இறக்கி/ஏற்றி மன்னார்புரத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை செல்லும். மற்ற வெளி ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளின் வழித்தடங்களில், எந்தவித மாற்றமுமின்றி வழக்கம்போல மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மன்னார்புரம் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு மாநகர சுற்றுப் பேருந்துகள் (Circular Buses) இயக்கவும் அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேற்படி தற்காலிக பேருந்து நிலையங்களில், பொதுமக்களுக்கு இன்னல்கள் ஏதும் ஏற்படாவண்ணம் காவல்துறையின் பாதுகாப்பும், மாநகராட்சியின் மூலம் நிழற்குடை, குடிநீர் வசதி, பொதுக்கழிப்பிட வசதி, ஒலிபெருக்கி மூலம் உடனுக்குடன் பயணிகளுக்கு தகவல்களை தெரிவித்தல் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனவும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *