திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் துறையூர் பொன்னர் சங்கம் பட்டி பகுதியை சேர்ந்த வடிவேலன் என்பவர் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டம் துறையூர் பொன்னர் சங்கம்பட்டி பகுதியில் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்நிலையில் அதே பகுதியில் உள்ள நத்தம் புறம்போக்கு இடமான மூன்று சென்ட் இடத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோபால் மூலமாக மக்கள் பயன்பாட்டிற்கு பால் சொசைட்டியும் நூலகமும் கட்டுவதற்கு அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவர் அரசியல் செல்வாக்கால் தற்போது அப்பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் உதவியுடன் அந்த இடத்தை அவருக்கு சொந்தமாக்கியுள்ளார்.. மேலும் அந்த இடத்தில் தற்போது கோவில் கட்டுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும் எனக்கு சொந்தமான இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதுகுறித்து பலமுறை முசிறி வருவாய் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தும் இன்னாள் வரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நத்தம் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்த விஏஓ மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிவா ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.