ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் கடந்த 2017ம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகப் படுத்தப்பட்ட நாள் தொடங்கி தற்போது வரை பல்வேறு குழப்பங்களுடனே இச் சட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது வரை ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது வணிக கட்டிடங்களில் வணிகம் செய்து வரும் வணிகர்கள் இனி தாங்கள் செலுத்தும் வாடகையுடன் கூடுதலாக 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி சேர்த்து செலுத்த வேண்டும் எனவும், இது கடந்த 10.10.24 முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. வணிகர்களில் 90 சதவீதம் பேர் வாடகை கட்டிடத்தில் வணிகம் செய்து வரும் நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு மிகப்பெரிய பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் உள்ள வணிகர்கள் இந்த அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு வகையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். வாடகையுடன் 18 சதவீதம் ஜி.எஸ்.டி. என்பதை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடுமையாக எதிர்கின்றது. வணிகர்களின் எதிர்ப்பு குரலுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க தவறியதால் பேரமைப்பு சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்களை மேற்கொள்வது என முடிவு செய்துள்ளனர்.

அதன்படி முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தலை நகரங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். அந்த வகையில் திருச்சியில் தலைமை தபால் நிலையம் பின்புறம் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மண்டல தலைவர் தமிழ்ச்செல்வம், திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர், திருச்சி மாநகர தலைவர் கண்ணன் மற்றும் மாநில துணைத் தலைவர்கள், மாநில இணைச்செயலாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட, மாநகர இளைஞர் அணி நிர்வாகிகள், மாவட்ட துணைத்தலைவர்கள், மாவட்ட இணைச். செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், கிளைச். சங்கங்களின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு வியாபாரிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *