தென்கயிலாயம் என போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் ஸ்வாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் லிங்கவடிவில் எழுந்தருளியுள்ளார். இக்கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இன்று காலை பரணிதீபம் ஏற்றப்பட்ட நிலையில், தாயுமானவர் சன்னதியிலிருந்து மாலை 5.30- மணிக்கு தீபம் ஏற்றப்பட்டு, அங்கிருந்து தீபம் கொண்டு செல்லப்பட்டு, தாயுமானவர், மட்டுவார் குழலமை உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி காட்சியளிக்க,
கொம்பு வாத்தியங்கள், சிவ வாத்தியங்கள் முழங்க 273 அடி உயரமும், 417 படிகள் கொண்ட மலைக்கோட்டை உச்சி தாயுமானவர் சன்னதி பிள்ளையார் கோவில் முன்பாக உள்ள உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கொப்பரையில் 900 லிட்டர் எண்ணெய் ஊற்றி 300-மீ அளவுள்ள பருத்தி துணியாலான மெகா திரியிட்டு மகாதீபம் சரியாக மாலை 6 மணிக்கு வான வேடிக்கை மேளதாளம் முழங்க ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தென்னாடுடைய சிவனே போற்றி என பக்திபரவசத்துடன் எம்பெருமானை வழிபாடு செய்து வணங்கிச்சென்றனர். இன்று மாலை ஏற்றபடும் இந்த மகா தீபம் தொடர்ந்து 3 நாட்கள் இரவும் பகலும் எரியும் என்பது குறிப்பிடத்தக்கது