திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நடைபெறவுள்ள பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி (Jamboree) மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி நிறைவு விழாவிற்கு கலந்துகொள்ள திருச்சி விமான நிலையம் வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சுற்றுலா மாளிகை செல்லும் வழியில், திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் மற்றும் நீதிக்கட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் ஆகியோரின் மணிமண்டபங்களுக்கு சென்று அவர்களது திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, மணிமண்டபங்களை ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மணிமண்டபங்களின் உட்புறப் பகுதிகளில் இம்மூவரின் வரலாற்றை சித்தரிக்கும் புகைப்படங்களை வாழ்க்கை அமைத்திடவும், மண்டபங்களின் வெளிப்புறங்களில் உள்ள புதர்களை அகற்றி, பூச்செடிகளை வைத்து தூய்மையாக பராமரித்திடவும் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்த நிகழ்வின்போது. தமிழக நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.