உலக புற்றுநோய் தினம் ஆண்டு தோறும் பிப்ரவரி 4 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் குமரவேல் பேரணியை தொடங்கி வைத்தார்.
ஆரம்பகட்ட நிலை புற்றுநோயை கண்டறிந்தால் புற்று நோயை முழுமையாக குணப்படுத்த இயலும் என்பதை மனதில் கொண்டு கடந்த 15 வருடங்களாக திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் இலவச புற்றுநோய் கண்டறியும் மருத்துவமனை தொடர்ச்சியாக செய்து வருகின்றனர். அதேபோல இந்த வருடமும் பிப்ரவரி நான்காம் நாள் உலகப் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உலக அளவில் 2050 ஆம் ஆண்டிற்குள் 3.5 கோடிக்கும் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்படுவார் என கணக்கிடப்பட்டுள்ளது.
இது 2022ல் கணக்கிடப்பட்ட இரண்டு கோடியிலிருந்து 2.5 மடங்கு அதிகமாக வாய்ப்பு இருப்பதாக புற்றுநோய்க்கான சர்வதேச அமைப்பு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா உலக நாடுகள் வரிசையில் புற்றுநோய் பாதிப்பில் மூன்றாவது இடம் வைக்கிறது இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2022 இல் 14.6 இலட்சமாக இருந்தது 2025-ல் இந்த எண்ணிக்கை 15 புள்ளி 7 லட்சம் ஆக இருக்கும் என்று மருத்துவ கவுன்சில் கணித்துள்ளது. ஆண்டுதோறும் அதிகரித்து வரும் புற்றுநோயை எதிர்த்து நாம் போராட வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. எனவே புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியமாகிறது .இதனை கருத்தில் கொண்டு தான் இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
முன்னதாக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் அருண்ராஜ் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் மற்றும் துணை மருத்துவ பட்டப்படிப்பு கல்லூரி மருத்துவர் ரேகா , பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் செந்தாமரை, இந்திரா கணேசன் கல்லூரி இயக்குனர் பாலகிருஷ்ணன், மாரியம்மன் செவிலியர் கல்லூரி முதல்வர் ரூபா மற்றும் சர்வைட் செவிலியர் கல்லூரி முதல்வர் மெட்டில்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.