திருச்சி வருமான வரித்துறை சார்பில் மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சம்பள பட்டுவாடா செய்யும் அலுவலர்களுக்கான விழிப்புணர்வு முகாம் திருச்சி பி.ஹெச்.எல் நிறுவனத்தின் வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மதுரை வருமான வரித்துறை முதன்மை ஆணையர் வசந்தன் கலந்து கொண்டு தலைமை வகித்து பேசினார். மேலும் இந்நிகழ்வில் மதுரை வருமானவரித்துறை கூடுதல் இயக்குனர் .மைக்கேல் ஜெரால்ட், திருச்சி முதலாவது சரகம் கூடுதல் ஆணையர் நித்தியா, மதுரை சரக கூடுதல் ஆணையர் ஸ்ரீதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். இதில் மத்திய மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சம்பள பட்டுவாடா அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் மதுரை வருமான வரி முதன்மை ஆணையர் வசந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில்…. முறையான வரி விலக்கு மற்றும் பணத்தைத் திரும்ப பெறுதல் கோரிக்கைகளின் முக்கியத்துவத்தையும், மோசடி பணத்தை திரும்ப பெறுதல் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் வருமான வரிச் சட்டத்தின் கீழ் அபராதம் மற்றும் வட்டியை ஈர்க்கும் என்று கூறினார். வரி, வட்டியை தவிர்க்க வரி செலுத்துவோர் மார்ச் 31, 2025 க்குள் புதுப்பிக்கப்பட்ட வருமானங்களை தாக்கல் செய்ய வேண்டும். எதிர்காலத்தில் பிழைகள் மற்றும் மோசடி நடவடிக்கைகளைத் தடுக்க வரி சட்டங்களின் விழிப்புணர்வை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.