அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தெற்கு மாவட்டம் சார்பாக, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் ரோட்டில் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்திற்கு ஏர்போர்ட் பகுதி செயலாளர் மதியழகன் வரவேற்புரையாற்றினார், தெற்கு மாவட்ட அவை தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் மேயரும், கழக அமைப்புச் செயலாளருமான சாருபாலா தொண்டைமான், கழக மாணவரணி செயலாளர், வழக்கறிஞர் நல்லதுரை மற்றும் தலைமைக் கழக பேச்சாளர் நெல்லை லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த பொதுக்கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் பேசுகையில்:-
“இம்மண்ணில் மறைந்தும் மறையாமல் வாழும் சாகா வரம் பெற்றவர்கள் சிலர் தான். சுதந்திர இந்தியாவிற்கு பிறகு மூவேந்தர் ஆண்ட இத் தமிழகத்தை ஆட்சி செய்த தலைவர்களுள், இன்றும் நம்முடன் வாழ்பவர்கள் பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர், மற்றும் இவர்கள் வழியில் வந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களே. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எப்பொழுதும் நம்முடன் இருக்கிறார் என்று தான் இயங்கிக் கொண்டிருக்கிறோம். அவர் இல்லாத குறையை போக்குவதற்காகவே வந்த மக்கள் தலைவர் தான் மக்கள் செல்வர். எப்பேர்ப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் சரி, மக்கள் செல்வர் பார்த்துக் கொள்வார். சமீப காலமாக நடந்த ஒரு நிகழ்வில் நம்மிடம் அம்மா இல்லையே என்ற ஒரு ஏக்கம் எனக்கு உள்ளது. அதற்குக் காரணம் பல லட்சம் செலவு செய்து, “என்னை எல்லோரும் “அப்பா” என்று அழைக்கிறார்கள்” என்று விளம்பரம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின் இவர் யாருக்கு அப்பா? தமிழகத்தில் பெருகிவரும் கஞ்சா வியாபாரிகளுக்கு அப்பாவா? கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு இவர் அப்பாவா? கொலைகாரர்களுக்கு இவர் அப்பாவா? கொள்ளைக்காரர்களுக்கு இவர் அப்பாவா? பாட்டிலுக்கு 5, 10 கூட்டி வைத்து விற்கும் கள்ள வியாபாரிகளுக்கு இவர் அப்பாவா? இப்படிபட்ட சமூக விரோத செயல்கள், தமிழகம் எங்கும் நடப்பதால் அவர்களுக்குத்தான் அவர் அப்பா. மற்றவர்களுக்கெல்லாம் இது படுகிறது “தப்பா”. புரட்சித்தலைவி மட்டும் இந்நேரம் நம்முடன் இருந்திருந்தால் பலருக்கு கழண்டிருக்கும் “டோப்பா”. மக்கள் செல்வர் கூறியது போல் 71 வயதில் அவர் ஒரு தாத்தா. அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த அவலமான ஒரு சூழ்நிலையை மறக்கடிக்க, இவர்கள் கையில் எடுத்ததுதான் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு. திமுகவில் உள்ள முக்கால்வாசி பேருக்கு ஒரு மொழியே சரிவர தெரியாது. உதாரணமாக, அதன் தலைவர் ஒரு வீட்டிற்கு செல்கிறார். அவரிடம் கேட்கிறார் “இவர் யார் உங்க சிஸ்டரா” என்று. அதற்கு அந்த தொண்டர் பதிலளிக்கிறார் “இல்லை சார் என் ஒய்ஃப்”. சிறிது நேரம் கழித்து இவர் அவரிடம் திரும்ப கேட்கிறார் “ஒய்ப்புக்கு கல்யாணம் ஆகிவிட்டதா” என்று.
இப்படிப்பட்ட அறிவிலிகள் கொண்ட ஒரு கூட்டத்திற்கு எதையுமே கற்க முடியாது. இதன் தலைவர் எப்படி அப்பாவாக முடியும்? அம்மன்களை வழிபடும் இம் மண்ணில், அனைவரையும் அம்மாவாக சகோதரியாக பாவிக்கும் இம் மண்ணில், ஒரே அம்மா தான், அது புரட்சித்தலைவி மட்டும்தான். அதேபோல, பேருக்கு எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு, ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் எடப்பாடி கட்சி, திருச்சியில் எந்த நிலைமையில் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். நம்மிடமிருந்து சென்ற ஸ்லீப்பர் செல்கள், சிறப்பாக அவர்களின் பணியை செய்து கொண்டிருப்பதால், விரைவில் திருச்சியில் அந்த கட்சியின் கதையை நல்ல விதமாக முடிப்பார்கள். கலைஞர் கையில் இருந்தது அண்ணா ஆரம்பித்த திமுக இல்லை என்று, எப்படி புரட்சித்தலைவர் அதிமுகவை ஆரம்பித்தாரோ, அதேபோல எடப்பாடியிடம் இருப்பது உண்மையான அதிமுக இல்லை என்று, மக்கள்செல்வர் அவர்கள், ஒரு பெண்ணின் பெயரால், ஒரு தாயின் பெயரால், புரட்சித்தலைவி அம்மாவின் பெயரால், “அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை” ஆரம்பித்தார். வருகின்ற 2026 ஆம் ஆண்டு, மக்கள் செல்வர் பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து, தமிழகத்தில் மீண்டும் புரட்சித்தலைவியின் பொற்கால ஆட்சியை தமிழகத்திற்கு வழங்கும் என்று பிறந்தநாளில் அம்மாவின் பிறந்தநாளில் உங்களுக்கு உறுதி கூறுகிறேன்.”
இப் பொதுக்கூட்டத்தில் கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் கமுருதின், கழக அம்மா தொழிற்சங்க பேரவை இணைச் செயலாளர் கலைச்செல்வன், நிர்வாகிகள் டோல்கேட் கதிரவன், இடியோசை கல்லணை குணா கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற, மாவட்ட துணைச் செயலாளர் தன்சிங் விழாவை தொகுத்து வழங்கினார். தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு செயலாளர் தருண் பொதுக் கூட்ட நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இவ்விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு 61&61A-வது வட்டச் செயலாளர்கள் மகேந்திரன் மற்றும் சரவணன் ஆகியோர் நன்றியுரை ஆற்றினர்.