சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் அம்மன் அஷ்டபுஜங்களுடன் வீற்றிருப்பது வேறு எந்த மாரியம்மன் கோயிலிலும் காணக் கிடைக்காத சிறப்பு வாய்ந்தவையாகும். திருக்கோவிலில் வருடம் தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் மாரிஅம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வர்கள். சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம் அதன் படி இந்த ஆண்டு சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா இன்று தொடங்கியது.
அதன் படி இன்று திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலின் இரண்டாவது வார பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 19-வது ஆண்டாக சமயபுரம் மாரியம்மனுக்கு பூ தட்டுகளை ஏந்தி ஊர்வலமாக எடுத்துச் செல்லும் நிகழ்வு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் உள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் அலுவலக வளாகத்தில் இன்று தொடங்கியது. இந்த நிகழ்விற்கு மாநில அமைப்பாளர் தர்ம பிரசாத் தலைமை தாங்கினார். பசு பாதுகாப்பு அமைப்பாளர் சசிகுமார், மாவட்ட தலைவர் சுதாகர் திலக், மற்றும் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வில் ஸ்ரீரங்கம் மலைக்கோட்டை வரகனேரி காஜா பேட்டை அந்தநல்லூர் காட்டூர் எடமலைப்பட்டி புதூர் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலைகள் கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தி சமயபுரம் மாரியம்மனுக்கு 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் பூ தட்டுகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இதில் மாற்று சக்தி பொறுப்பாளர் சித்ரா மாவட்ட செயலாளர் ஜெயந்தி மாவட்டத் துணைத் தலைவர் லட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.