சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும் முதன்மையானதுமான சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்து செல்வார்கள். மேலும் சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்கள் சிறப்பு வாய்ந்தவையாகும் குறிப்பாக சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரை தேர் திருவிழா லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்வார்கள். திருவிழாவை முன்னிட்டு, மாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28 நாட்கள் சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பது தனிச்சிறப்பாகும். இத்தகைய பச்சை பட்டினி விரதம் பூரணமடைந்தவுடன் சிவபெருமானிடம் உள்ள சர்வ சக்தியையும் பெற்று படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருள்பாலித்தல் ஆகிய 5 தொழில்களையும் செய்து, சித்திரை பெருவிழா நாட்களில் அம்மன் அருள்புரிந்து வருவதாக ஐதீகம். இந்த ஆண்டுக்கான தேர்த் திருவிழா கடந்த 6ம் தேதி காலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது. அன்று காலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பாடாகி தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் அம்மன் கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

இதைத்தொடர்ந்து திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்தார். அதேபோல் தினமும் இரவு 7 மணிக்கு மேல் சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், மரக்குதிரை வாகனம் என ஒவ்வொரு வாகனத்தில் எழுந்து கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 15ம் தேதி சித்திரை தேர் திருவிழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சித்திரை பெரும் திருவிழாவின் 13ம் நாளான இன்று தெப்பத்தில் சமயபுரம் உற்சவர் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். முன்னதாக மகா தீபாரதனை நடைபெற்றது. தெப்பத்தில் எழுந்தருளிய உற்சவர் சமயபுரம் மாரியம்மன் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற பக்தி முழகத்துடன் சாமி தரிசனம் செய்தனர். வரும் 22 ஆம் தேதி சித்திரை தேர் திருவிழா நிறைவடைகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் பிரகாஷ் தலைமையில் கோவில் பணியாளர்கள் ஊழியர்கள் செய்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்