திருச்சியில் புதிய மின்சார ஆட்டோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஊர் கேப்ஸ் என்று சொல்லப்படும் இந்த ஆட்டோ சேவை பெண் ஓட்டுநர்களை ஊக்கப்படுத்தவும், சோலார் சார்ஜிங் ஸ்டேஷன் போன்ற முக்கிய விரிவாக்கத் திட்டங்களை இந்த ஊர் கேப்ஸ் அறிமுகப்படுத்தி வருகிறது. தமிழகத்தை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஊர் கேப்ஸ், கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் மின்சார ஆட்டோக்களை அறிமுகம் செய்து வாட்ஸ்ஆப் செயலி மூலம் ஆட்டோக்களுக்கு பதிவு செய்யும் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஊர் கேப்ஸ் நிறுவனரும், முதன்மை செயல் அதிகாரியுமான மரிய ஆண்டனி பேசுகையில்,…
ஊர் கேப்ஸ் நிறுவனம் சார்பில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருச்சியில் மின் ஆட்டோ சேவையை அறிமுகம் செய்தோம். இது பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 30 ஆட்டோக்களுடன் தொடங்கிய இந்த சேவை நல்ல வரவேற்பின் காரணமாக, தற்போது 8000 ஆட்டோக்கள் திருச்சி மாவட்டத்தில் இயங்கி வருகிறது. மேலும் வரும் ஆண்டில் திருச்சி, கோவை, மதுரையில் ₹.100 கோடி முதலீடு செய்ய உள்ளோம். இதில் திருச்சி மாவட்டத்தில் ₹.30 கோடியில் 500 புது மின் ஆட்டோக்களை அறிமுகம் செய்ய உள்ளோம். இதன் மூலம் 250 பெண்கள் உள்பட 600 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். பெண்கள் மற்றும் அனைத்து ஓட்டுநர்களுக்கும் தேவையான திறன்களை மேம்படுத்த திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஹோலி கிராஸ் கல்லூரியின் மூன்று துறைகள் அதை சார்ந்த மாணவ, மாணவிகள் ஓட்டுநர்களுக்கு தேவையான திறன் பயிற்சிகளை வழங்குவார்கள். இந்த ஊர் ஆட்டோவிற்கு முதல் இரண்டு கிலோமீட்டருக்கு 39 ரூபாயும், அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 16 ரூபாயும் நிர்ணயித்துள்ளோம். இன்றைய காலகட்டத்தில் ஊர் ஆட்டோவிற்கு வரும் பதிவுகளில் 40 சதவீதம் மட்டுமே தங்களால் சேவை வழங்க முடிகிறது என்றும், கூடுதல் சேவை வழங்குவதற்காக தற்போது 500 ஆட்டோக்கள் இந்தாண்டிற்குள் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.