திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டு மின்னப்பன் தெரு பகுதிகளில் கடந்த வாரம் குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் ஒரு சிறுமி உட்பட மூவர் உயிரிழந்ததாக தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்ததில் அங்கு குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை என்பதும் அந்த பகுதியில் நடந்த திருவிழாவின் போது அன்னதானம் சாப்பிட்டவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. மேலும் இறந்தவர்களின் உயிரிழப்புக்கு அவர்களுக்கு வேறு சில உடல் பிரச்சினைகள் இருந்தது தான் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு சட்டமன்றத்தில் விளக்கம் அளித்தார். இந்த நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடரை முடித்துவிட்டு சென்னையிலிருந்து திருச்சி வந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு பத்தாவது வார்டு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்பகுதி மக்களிடம் குடிநீர் எவ்வாறு வருகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார், அப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு அப்பகுதி மக்கள் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் இது குறித்து அங்குள்ள மருத்துவர்கள் செவிலியர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார். மேலும் அப்பகுதியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சென்று ஆறுதல் கூறி அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே என் நேரு :- இந்தப் பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை குடிநீரில் எந்த பிரச்சனையும் இல்லை உயிரிழந்தவர்களுக்கு வேறு சில உடல் ரீதியான பிரச்சினைகள் இருந்தது என்பதை அவர்களின் குடும்பத்தினரே ஒப்புக் கொண்டுள்ளனர். மக்கள் எந்த அச்சமும் இன்றி குடிநீரை குடிக்கலாம் இங்குள்ள ஒரு பகுதியில் மட்டும் மக்களின் அச்சம் காரணமாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை அந்த பகுதியிலும் மாநகராட்சியின் சார்பில் குடிநீர் விநியோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்