தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திருச்சி மாவட்டத்தில் வருகிற 8 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். அந்த வகையில் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் புதிய மார்க்கெட் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுவது குறித்து திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் காதர் மைதீன் தலைமையில் வியாபாரிகள் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரை சந்தித்து மனு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து கூட்டமைப்பின் தலைவர் காதர் மைதீன் பேட்டியளிக்கையில்:- திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக அமைய உள்ள காய்கறி மார்க்கெட்டிற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வரும் ஒன்பதாம் தேதி அன்று அடிக்கல் நாட்ட உள்ளதாக அறிகிறோம்.கடந்த 29.6.2024 அன்று இதே மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற காந்தி மார்க்கெட் வியாபாரிகள் ஆலோசனை கூட்டத்தில் புதிய மார்க்கெட் வடிவமைப்பு எந்த வகையிலும் சாத்தியமில்லாமலும், போதுமானதாகவும் இல்லை என்று வியாபாரிகள் நாங்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தோம். அப்போது கலெக்டர் எங்களை மீண்டும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, பிறகு புதிய மார்க்கெட் ஒழுங்குபடுத்தப்படும் என்று அறிவித்தார். ஆனால் இன்றுவரை எங்களை அழைத்துப் பேசவில்லை. இந்நிலையில் இன்று மாலை நாங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரை சந்தித்து எங்கள் கோரிக்கையை அளித்துள்ளோம் மேலும் தமிழக முதல்வர் திருச்சி வரும் நேரம் எங்களது காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு நல்லதொரு விடிவுகாலம் பிறக்கும் என்று நம்புகிறோம். அப்படி இல்லை என்றால் அடுத்த கட்டமாக எங்களது வியாபாரிகளுடன் ஆலோசித்து போராட்டங்களை நடத்துவோம் என தெரிவித்தார். அருகில் செயலாளர்
கந்தன். அவைத் தலைவர் கருப்பையா, ஒருங்கிணைப்பாளர் கண்ணதாசன், பொருளாளர் வெங்கடாசலம் மற்றும் ஆலோசகர்கள், துணைத் தலைவர்கள்,
துணைச் செயலாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.