திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக மத்திய,வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் திமுக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில், தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் மாநகர மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன் ஸ்டாலின் குமார், பழனியாண்டி, கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திமுக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என் நேரு பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்து நான்காண்டுகளில் திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் 30 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை முதலமைச்சர் வழங்கி உள்ளார். அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியில் எந்தவிதமான திட்டங்களும் திருச்சி மாவட்டத்திற்கு நிறைவேற்றவில்லை. இது குறித்து மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் அவர்கள் சிந்தித்துப் பார்க்கும் வகையில் திமுகவினர் பிரச்சாரம் செய்ய வேண்டும். முதலமைச்சர் சொன்னதை மட்டும் செய்யவில்லை சொல்லாததையும் செய்து தந்துள்ளார்கள். பஞ்சப்பூரில் திறக்கப்படவில்லை ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கலைஞர் பெய ரிலும் புதிதாக கட்டப்படவுள்ள மார்க்கெட் தந்தை பெரியார் பெயரிலும் கனரக வாகன முனையம் அறிஞர் அண்ணா பெயரிலும் திறக்கப்பட உள்ளது. கத்திப்பாரா பாலம் போல பஞ்சப்பூரில் வருகிறது, ஐ.டி.பார்க் வர உள்ளது. இன்னும் ஐந்தாண்டு காலத்தில் திருச்சி மாவட்டம் மிகப்பெரிய வளர்ச்சி அடைய உள்ளது. கடந்த தேர்தலை போல வரும் தேர்தலிலும் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆட்சி அமைக்கும். தலைமை யாரை வேட்பாளராக அறிவிக்கிறதோ அவரை வெற்றி பெற செய்ய வேண்டியது நம் அனைவரின் கடமை.

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பணிகள் முதலமைச்சர் திருச்சிக்கு வர உள்ள 8, 9 ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது. திருச்சி மாவட்டத்திற்கு பல் மருத்துவமனை, சித்த மருத்துவமனை தேவை என்கிற கோரிக்கை உள்ளது. அதே போல அல்லிதுரை சாலைக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை உள்ளது. நிதி நிலமைக்கு ஏற்ப முதலமைச்சர் அதை அறிவிப்பார். 8 ஆம் தேதி காலை துவாக்குடி பகுதியில் கட்டப்பட்டுள்ள ஸ்மார்ட் பள்ளியை திறந்து வைக்கிறார். மாலை 5 மணிக்கு சுற்றுலா மாளிகையிலிருந்து புறப்பட்டு கலைஞர் அறிவாலயம் சென்று அங்கு திமுக நிர்வாகிகளை சந்திக்கிறார். மறுநாள் 9 ஆம் தேதி காலை பஞ்சப்பூர் பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றை திறந்து வைத்துவிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். மிகப்பெரிய கூட்டணி அமைத்து விட்டோம் என எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார் இது புது கூட்டணி அல்ல கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே அவர்கள் இதே கூட்டணி அமைத்து தான் போட்டியிட்டார்கள் அந்த கூட்டணி தோல்வியடைந்து திமுக கூட்டணி தான் வெற்றி பெற்றது. முதலமைச்சர் செய்துள்ள நலத்திட்ட உதவிகள் மகளிர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. எம்.ஜி.ஆருக்கு பெண்கள் வாக்களித்தது போல் நம்முடைய முதல்வருக்கும் வாக்களிப்பார்கள்.

எள் முனையளவும் யாரும் சந்தேகம் பட வேண்டாம். அமைச்சர்கள் மீது வழக்கு போட்டு மிரட்டுகிறார்கள் இருந்த பொழுதும் மக்களுடைய ஆதரவு திமுகவிற்கு தான் உள்ளது. இன்று தமிழ்நாட்டில் தலைவர் என்றால் அவர் நம்முடைய முதலமைச்சர் மட்டும்தான் எதிரில் உள்ள யாரையும் மக்கள் தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை. இரண்டு நாள் பயணமாக திருச்சி வரும் முதலமைச்சருக்கு நாம் அனைவரும் மிகப்பெரிய அளவில் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சென்று மாநில சுயாட்சிக்கு வித்திடும் வகையில் தீர்ப்பை பெற்றுத் தந்த முதலமைச்சருக்கு பாராட்டுக்கள் தெரிவித்தும், பஞ்சபூர் பேருந்து நிலையம் அமைக்க உதவிய முதலமைச்சருக்கும் துணை முதல் அமைச்சருக்கும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேருவுக்கும் நன்றி தெரிவித்தும்ம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்