திருச்சி – திண்டுக்கல் சாலை கருமண்டபம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோவில்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கோவில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று. புதிய விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்து பூஜைகள் நடைபெற்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இந்நிலையில் அருள்மிகு இளங்காட்டு மாரியம்மன் கோவில் 76 ஆம் ஆண்டு வைகாசி திருவிழா மற்றும் 34 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா இன்று நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் உலக நன்மைக்காகவும் பொதுமக்கள் நோய் நொடி இன்றி வாழவும், மாணவ மாணவிகள் கல்வி அறிவு பெறவும் குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை முன்னிறுத்தி
காவேரி ஆறு அய்யாளம்மன் படித்துறையில் இருந்து தீர்த்த குடம் பால்குடம் தீச்சட்டி அழகு குத்தி காவடி எடுத்து 1000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். மேலும் இந்த ஊர்வலத்தில் திருநங்கைகள் தீச்சட்டி ஏந்தி அழகு குத்தி ஊர்வலமாக வந்தனர்.
அதனைத் தொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குழியில் பக்தர்கள் இறங்கி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டனர் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இளங்காட்டு மாரியம்மன் கோவில் நிர்வாகிகள் விழா குழுவினர் மற்றும் பக்த கோடிகள் செய்திருந்தனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.