திருச்சி பஞ்சப்பூரில் மே 9-ந் தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை திறந்து வைத்தார். மேலும் இந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வந்து செல்வதற்கான அட்டவணை, பேருந்துகளுக்கு இடம் ஒதுக்குவது குறித்தும், ஒப்பந்தம் அளிப்பது குறித்த பணிகள் நடைபெற்று வந்ததால் பேருந்து முனையம் திறப்பதற்கு கால தாமதம் ஆனது. இந்நிலையில் பஞ்சப்பூரை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் அமைச்சர் கே என் நேரு அளித்த வாக்குறுதியை நம்பி இந்த பேருந்து முனையத்தில் தங்களின் ஆட்டோக்களை நிறுத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் பஞ்சப்பூர். பேருந்து நிலையத்தில் ஆட்டோக்களை நிறுத்த போவதாக அறிவித்தனர். இந்நிலையில் இரு தரப்பினரையும் ஆர்டிஓ அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார் .அந்த பேச்சுவார்த்தையில் முடிவு பெறாத நிலையில் இன்று காலை திருச்சி பஞ்சப்பூர். ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பகுதியில் டாக்டர் கலைஞர் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கம் மற்றும் மூவேந்தர் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கம் ஆகியோர் சார்பில் 200க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை நிறுத்தி வைத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.அவர்களை போலீசார் கலைந்து போகுமாறு அறிவுறுத்தினர்.இருப்பினும் அவர்கள் கலைந்து செல்லாமல் தங்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு எட்டப்படும் வரை இங்கு காத்திருப்பதாக தெரிவித்தனர்.