திமுக துணை பொதுச்செயலாளரும் மேல்சபை எம்பியுமான திருச்சி சிவா பெருந்தலைவர் காமராஜர் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்பட்டது. பின்னர் அவர் விளக்கம் அளித்தார். இருப்பினும் திருச்சி சிவா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி தமிழர் தேசம் கட்சி திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் இன்று திருச்சி சிவா எம் பி யின் வீட்டை முற்றுகையிடம் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி மேஜர் சரவணன் ரவுண்டானா அருகில் தமிழர் தேசம் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தளவாய் ராஜேஷ், வீர முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில இளைஞரணி அமைப்பாளர் துறை குணசேகரன்,
மாநில ஒருங்கிணைப்பாளர் வைரவேல், மாநில செயலாளர் பரமசிவம், மாவட்டச் செயலாளர் வள்ளல் மணி உள்ளிட்ட கட்சியினர் திரண்டனர். பின்னர் அங்கிருந்து ராஜா காலனியில் உள்ள திருச்சி சிவா வீட்டை நோக்கி புறப்பட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் கூறும்போது இறுதி மூச்சு வரை எளிமை மற்றும் நேர்மையுடன் மக்களுக்கு உழைத்த பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசிய திருச்சி சிவா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றனர். இந்தப் போராட்டத்தின் காரணமாக மேஜர் சரவணன் ரவுண்டானா பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .