தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து பாஜக தொடர்ந்து முறை கேடுகளை நிகழ்த்தி அதன் மூலம் வெற்றி பெற்று வருவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவரும் எம்பியுமான ராகுல்காந்தி ஆதாரங்களுடன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் கர்நாடகாவில் ஒரே தொகுதியில் 1 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதை ஆதாரத்துடன் வெளியிட்டார். அதேபோல, மகாராஷ்டிராவில் நடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் 1 கோடி போலி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்திருப்பதாக புள்ளி விவரத்துடன் வெளியிட்டார். இதனால் தேர்தல் ஆணைய முறைகேடுகளையும், பாஜகவுக்கு உடந்தையாக இருப்பதையும் கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பாக இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் சூர்யா பிரகாஷ் தலைமையில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சஹரிக்க ராவ் முன்னிலையில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் நூற்றுக்கு மேற்பட்டோர் திருச்சி காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சலம் மன்றத்திலிருந்து பேரணியாக சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தின் போது போலியாக சேர்க்கப்பட்ட வாக்காளர் பட்டியல் நகலை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
மேலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸாரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனால் இளைஞர் காங்கிரஸ் சார் மற்றும் போலீசார் கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த ஆர்பாட்டத்தில் மாநில துணை தலைவர்கள் கிருத்திகா, பினீஷ், பொது செயலாளர்கள் சரவணன் சுபசோமு, விஜய் பட்டேல், அபுதாகிர், மோதி பெரியசாமி, பிசிசி உறுப்பினர் லாரன்ஸ், நாகர்கோவில் மாவட்ட தலைவர் டைசன் ,திருச்சி மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரகுநாதன் மற்றும் மாநில மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.