சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வந்த தூய்மை பணியாளர்களை ஒப்பந்த நிறுவனத்திற்கு மாற்றம் செய்ததை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட்டம் மேற்கொள்ள வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் போராட்டத்தைக் கைவிட மறுத்த தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிஐடியு தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தூய்மை பணியாளர்கள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தியும் இதுவரை திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கோசங்கள் எழுப்பப்பட்டது. மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.