திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் பி.எஸ்.ஆர் அறக்கட்டளை மூலம் 1300 குழந்தைகளுடன் 14-ம் ஆண்டு சிறார் தீபாவளி நிகழ்வு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
திருச்சியை மையமாக கொண்டு இயங்கி வரும் பி.எஸ்.ஆர் அறக்கட்டளை கடந்த பத்து வருடங்களாக நூற்றுக்கணக்கான குழந்தைகளின் கல்விக்கு உறுதுணையாக இருப்பதுடன் ஆதாரவற்றோர், சாலையோர மக்களுக்கு உணவளிப்பது, பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு வழிகாட்டுதல், குருதி கொடை வழங்குதல் உட்பட பல்வேறு சமூக பணிகளை முன்னெடுத்து நடத்திவருகின்றது. குறிப்பாக கடந்த 14 வருடங்களாக அரசு குழந்தைகள் காப்பகங்கள், அரசு உதவி பெறும் குழந்தைகள் காப்பகங்கள், குடிசைவாழ் பகுதியை சேர்ந்த குழந்தைகள் என 15 குழந்தைகளில் ஆரம்பித்த சிறார் தீபாவளி பயணம் இந்தாண்டு 1,300 குழந்தைகளுடன் கொண்டாடப்பட்டது.
அனைத்து குழந்தைகளுக்கும் புது ஆடை, சிறப்பு பரிசுகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். இந்த ஆண்டு சிறார் தீபாவளி கொண்டாடட்டத்துடன் பிஎஸ்ஆர் அறக்கட்டளையின் துவக்கவிழாவும் நடைபெற்றது. 10-ம் ஆண்டு இந்த விழாவின் சிறப்பாக பல்வேறு பிரிவுகளில் சமூக நல பணிகளை மேற்கொண்டு வரும் சமூக சேவகர்களுக்கு விருதும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கௌரவ விருந்தினராக எக்ஸல் குரூப் ஆப் கம்பெனியின் சேர்மன் முருகானந்தம், மண்டல குழு தலைவர் மதிவாணன்,சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ராகுல்காந்தி, குழந்தைகள் நல குழுவின் தலைவர் மோகன்,பிஎஸ்ஆர் அறக்கட்டளயின் நிர்வாக அறங்காவலர் ஷேக் அப்துல்லா, நிதி அறங்காவலர் குணசீலன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.