திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் பள்ளி மாணவர் பிரிவுக்கான கையுந்து பந்து போட்டிகளை மாவட்ட ஆட்சியர் சரவணன் முன்னிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து பார்வையிட்டு விளையாட்டு வீரர்களிடம் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி சேஷத்ரிமயும் தீபிசானு. மண்டல குழு தலைவர் மதிவாணன், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நிலமெடுப்பு) பாலாஜி, மேலாளர் (விளையாட்டு விடுதிகள் சென்னை) மகேஸ்வரி. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர்கள், பயிற்சியாளர்கள், மேலாளர்கள், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞான சுகந்தி, அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் தொடங்கி, பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பொது பிரிவினர், பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியர் என 5 பிரிவுகளில், ஆண் பெண் இருபாலரும், பங்கேற்கும் வகையில் 32 விளையாட்டுக்கள் 37 வகைகளில், மாவட்ட மண்டல அளவில் நடைபெற்று வருகிறது. இதில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீரங்கனைகள் பங்கேற்றுள்ளனர். போட்டியின் 6-வது நாளான இன்று (அக்.7) பள்ளி மாணவர், மாணவியர் பிரிவுக்கான கையுந்து பந்து (Volley Ball) போட்டிகள், திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியது. இன்று முதல் 10 ஆம் தேதி வரை மாணவர்களுக்கும், 10 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை மாணவிகளுக்கும் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 38 மாவட்டங்களில் இருந்து 555 வீரர்கள், 570 வீரங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பேசுகையில்:- கல்வி உரிமை சட்டத்தில் இணைய விண்ணப்பிக்கும் இணையதளம் முடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அது குறித்து ஆராய்ந்து தேவைப்பட்டால் விண்ணப்பிக்க காலக்கெடு நீடிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.ஒன்றிய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆர்.டி.இக்கு வழங்க வேண்டிய நிதியை ஒதுக்கவில்லை. அவர்கள் முறையாக ஒதுக்கியிருந்தால் சராசரியாக 60 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்திருப்பார்கள். ஒன்றிய அரசு நிதியை ஒதுக்காவிட்டாலும் மாநில அரசு அந்த நிதியை ஒதுக்கியது. இனியாவது ஒன்றிய அரசு எந்த அரசியலும் பார்க்காமல் கல்விக்கான நிதியை கால தாமதமின்றி வழங்க வேண்டும்.