திருச்சியில் நடைபெற்ற அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கே என் நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- கூட்டுறவு சங்கம் என்பது மிகப்பெரிய நிறுவனம். தமிழ்நாட்டில் 40 ஆயிரத்திற்கும் மேல் கூட்டுறவு சங்கங்கள் உள்ளது. பல்வேறு துறைகளும் அதில் உள்ளன. ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக தவறு நடந்தால் அதை மொத்தமாக குறிப்பிடக் கூடாது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் பணம் பாதுகாக்கப்படும். ஒன்றிய அரசு பாரபட்சமாக செயல்படுகிறது, சட்டமன்றத்தில் முதலமைச்சர் சென்னைக்கு அடுத்து மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ திட்டம் கொண்டு வரப்படும் என தெரிவித்திருந்தார்.

இருபது லட்சம் தொகை இல்லை என நிறுத்தி உள்ளனர். ஆனால் வடமாநிலங்களுக்கு அளித்துள்ளனர். ஒன்றிய அரசு பாரா முகமாக உள்ளது. இது மிகவும் சங்கடமாக உள்ளது . காவிரி பாலம் கட்டுவதால் திருச்சியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது, அதேபோல் ஜங்ஷன் பாலம் மற்றும் மேரிஸ் மேம்பாலத்தில் ரெயில்வே இன்னும் தங்கள் பணிகளை முடிக்காமல் தாமதப்படுத்துவதால் இந்த பணியை தற்போது செய்ய முடியாது . அதை செய்தால் மீண்டும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகும். கோரையாறு பாலம் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருவரங்கம் பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படும். நீங்கள் சொன்னால் நாளைக்கே திறக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கே என் நேரு கூறினார். அருகில் கலெக்டர் சரவணன், மேயர் அன்பழகன், எம்எல்ஏக்கள் பழனியாண்டி, சௌந்தர பாண்டியன், மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.
