இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் , மை பாரத் கேந்திரா திருச்சி மாவட்டம் சார்பாக சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஒற்றுமை அணிவகுப்பு பேரணியை திருச்சி காஜாமலை பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கொடி அசைத்து துவக்கி வைத்தார். நாடு முழுவதும் இந்த நிகழ்ச்சி மூன்று கட்டமாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக அக்டோபர் 6 முதல் அக்டோபர் 30ஆம் தேதி வரை பல்வேறு போட்டிகளும், இடங்களை சுத்தப்படுத்தும் நிகழ்வுகளும் நடைபெற்றது.
இரண்டாம் கட்டமாக திருச்சி மாவட்டத்தில் இன்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்து 3 கிலோ மீட்டர் தூரம் பேரணி நடைபெறுகிறது. மூன்றாம் கட்டம் நவம்பர் 26 ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 5ஆம் தேதி வரை தேசிய அளவில் நடைபெறுகிறது. குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த இடத்தில் இருந்து ஒற்றுமைக்கான சிலை இருக்கும் இடம் வரை பேரணி நடைபெறும்.
இரண்டாம் கட்டமாக இன்று நடைபெறும் பேரணியில் பங்கேற்கும் மாணவர்களில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஒருவர் என தேர்ந்தெடுக்கப்பட்டு குஜராத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிகழ்வில் மை பாரத் கேந்திரா ஒருங்கிணைப்பாளர் பிரவீன், எம் பி துரை வைகோ , மதிமுக துணை பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, மாவட்ட உதவி ஆட்சியர் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
