ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வருகிற டிசம்பர் 4-ந் தேதி கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி கோவிலின் கார்த்திகை கோபுரம் அருகே சொக்கப்பனை அமைக்கப்பட்டு கொளுத்தப்படும். அதனை நம்பெருமாள் கதிர் அலங்காரத்தில் எழுந்தருளி கண்டருளுவார். கார்த்திகை தீபத்திருநாளையொட்டி சொக்கப்பனை பந்தல் அமைக்க முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி கார்த்திகை கோபுரம் அருகே இன்று காலை 11 மணி அளவில் நடைபெற்றது. அப்போது சுமார் 20 அடி உயரம் உள்ள தென்னை மரக்காலின் நுனியில் சந்தனம், மாவிலை மற்றும் பூமாலை உள்ளிட்ட மங்கலப்பொருட்கள் வைக்கப்பட்டு கோவில் அர்ச்சகர்கள் வேதமந்திரங்கள் சொல்ல புனிதநீர் தெளிக்கப்பட்டது.

அதன்பின்னர் முகூர்த்தக்காலை கோவில் ஊழியர்கள் நட்டனர். அப்போது கோவில் யானை ஆண்டாள் தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தியது. இந்த நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த முகூர்த்தக்காலை சுற்றி 5 அடி அகலத்திற்கும், 20 அடி உயரத்திற்கும் சொக்கப்பனை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை வெளிநாட்டவர் தங்கள் செல்போன் மற்றும் கேமராக்களில் படம் பிடித்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்