திருச்சி பொன்மலை காவல் நிலைய எல்லையில் உள்ள ஒயின் ஷாப்பிற்குள் அத்து மீறி உள்ளே நுழைந்து மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்றதாக கடந்த மாதம் 27.06.2020-ம் தேதி பிரபல ரவுடி ஜெய் (எ) ஜெய்குமார் (எ) கொட்டப்பட்டு ஜெய் அவரது சகோதரர் ராஜ்குமார் ஆகியோர் மீது பொன்மலை காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் புகார்தாரரை கடந்த 20.07.2021-ம் தேதி ரவுடி கொட்டப்பட்டு ஜெய்,வழி மறித்து நீதிமன்றம் சென்று சாட்சி சொன்னால் கொன்று விடுவேன் என்றும்,தனக்கு காவல்துறையினர் மற்றும் அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது மேலும் அல்லித்துறை சாமியார் பாலசுப்பிரமணியம் மற்றும் வழக்கறிஞர் கார்த்தி ஆகியோரிடம் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அல்லித்துறை சாமியார் பாலசுப்பிரமணியனுக்கு எல்லா இடத்திலும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், தன்னை என்கவுன்டர் லிஸ்டிலிருந்து பெயரை நீக்குவதாகவும், வழக்குகளை முடித்து கொடுப்பதாகவும், தன்னை எதிர்த்து யாரும் சாட்சி சொல்லும் பட்சத்தில் அவர்களை கொலை செய்து விடுவார்கள் என்று அல்லித்துறை சாமியார் கூறியதாகவும், கொட்டப்பட்டு ஜெய் சாட்சியங்களை மிரட்டியதாக தெரியவருகிறது. எனவே ரவுடி ஜெய் என்கிற கொட்டப்பட்டு ஜெய்,அல்லித்துறை சாமியார் பாலசுப்பிரமணியம் மற்றும் வழக்கறிஞர் கார்த்திக் ஆகியோர் தொடர்பினை வைத்துக்கொண்டு அரசியல்துறை மற்றும் காவல்துறையினரிடம் செல்வாக்கு உள்ளது போல் உரையாடியது மக்களின் ஒருபிரிவினரிடையே அச்சத்தையும்,பீதியையும் ஏற்படுத்தி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கொலை மிரட்டல் விடுத்ததாக கொடுத்த புகாரையடுத்து ஜெய் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. மேலும் சுமார் 30 வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடி ஜெய் என்கிற கொட்டப்பட்டு ஜெய்குமார் அவருக்கு துணையாக செயல்பட்ட வழக்கறிஞர் கார்த்திக், அல்லித்துறை சாமியார் பாலசுப்பிரமணியம் ஆகியோர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் மேற்படி ஜெய் (எ) ஜெய்குமார் (எ) கொட்டப்பட்டு ஜெய் (38/21) கொட்டப்பட்டு,திருச்சி என்பவர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்; என விசாரணையில் தெரிய வருவதாலும்,அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டும் பொன்மலை சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையின் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண், ஜெய் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.