திருச்சி மாவட்டம் பேரூர் பகுதியில் வசித்து வருபவர் விவசாயி மருதமுத்து. இவர் விவசாயத்தை மேம்படுத்த அருகில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.1.50 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதற்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6000/- தவணை செலுத்த வேண்டும்.இந்நிலையில், கொரோனாவால் அறிவிக்கப்பட்ட தொடர் ஊரடங்கு காரணமாக விவசாயத்தில் அன்றாட வருமானம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த 3 மாதங்களாக சரிவர தவணை செலுத்த இயலவில்லை . நிதி நிறுவனம் தவணை செலுத்த வேண்டி மருதமலைக்கு நெருக்கடி அளித்து வந்தது.
சென்ற வாரத்தில் நிதி நிறுவன ஊழியர்கள் உடனடியாக தவணைத் தொகையை உடனடியாக கட்டி ஆக வேண்டும் எனவும் அதுவரை வீட்டை விட்டு செல்ல மாட்டோம் எனக் கூறி மிரட்டல் விடுத்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து கேலியும், கிண்டலும் செய்தனர். இதனால் பெரும் அவமானத்திற்குள்ளான மருதமுத்து, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மருதமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இன்று மதியம் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து விவசாயி மருத முத்துவின் உடலை உறவினர்கள் மற்றும் விவசாயிகள் வாங்க மறுத்தும், விவசாயி தற்கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி திருச்சி அரசு மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் திருச்சி சாலை மிகவும் பரபரப்பாக காணப்பட்டது..