திருச்சியில் தியாகி இமானுவேல் சேகரன் உருவப்படத்துக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அவரிடம் 2 இடங்களில் சிலை அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
திருச்சி ஏர்போர்ட் எதிரே உள்ள வயர்லஸ் சாலை விஜய் மகாலில் நேற்று மாலை தியாகி இமானுவேல் சேகரன் 64-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. தேவேந்திர குல வேளாளர்கள் பேரமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் வக்கீல் சங்கர் , திருச்சி மாவட்ட திமுக துணை செயலாளர் குடமுருட்டி சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில இளைஞரணி அமைப்பாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தியாகி இமானுவேல் சேகரன் உருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார்.
அப்போது அவரிடம் திருச்சியில், இமானுவேல் சேகரன் உருவச் சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன், இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ., டெல்லி அரசு பிரதிநிதி ஏ.கே. எஸ். விஜயன், பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் பிரின்ஸ், திருச்சி மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.