வேலூர் நேஷனல் சாலை வழியாக வேலூர் எஸ்பி செல்வகுமார் வந்து கொண்டிருந்தார். அப்போது இவர்களுக்கு முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தில் மூன்று இளைஞர்கள் கையில் பட்டா கத்தியுடன் வேகமாக சென்றனர். இதனை பார்த்து எஸ்.பி அந்த இளைஞர்களை தடுத்து நிறுத்த முற்பட்டார். ஆனால் இளைஞர்கள் நிற்காமல் வேகமாக இருசக்கர வாகனத்தில் பறந்து சென்றனர்.
எஸ்.பி மற்றும் போலீசார் அந்த இளைஞர்களை வாகனத்தில் விரட்டி சென்றனர். அப்போது 2- இளைஞர்கள் மட்டும் இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி அருகிலிருந்த தெருக்களில் ஓடினர். ஒரு இளைஞர் மட்டும் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இந்த 3 இளைஞர்களில் 2 பேரை மட்டுமே போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அந்த இளைஞர்களிடம் விசாரணை நடத்தியதில் சற்று நேரத்திற்கு முன்பாக வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பச்சை குத்தும் தொழில் செய்து வருகின்றனர் அவர்களிடம் கிஷோர், பாலாஜி, லிங்கேஸ்வரன் ஆகிய மூன்று இளைஞர்கள் பட்டா கத்தியைக் காட்டி, மிரட்டி 1- செல்போன், 1500/- ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றது தெரியவந்தது.
இந்த இரண்டு இளைஞர்களிடம் இருந்து இரண்டு பட்டா கத்திகள், ஒரு செல் போன், 1500 ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் லிங்கேஸ்வரன் மற்றும் கிஷோர் ஆகிய இரண்டு இளைஞர்களை பிடித்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய பாலாஜியை போலீசார் தேடி வருகின்றனர்.