பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ,மாநில நிர்வாகி மேகராஜன், சட்ட ஆலோசகர் முத்துச்சாமி, பிரேம் குமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் உள்ளே நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கிக் கொண்டிருந்த வருவாய் கோட்டாட்சியர் பழனிக்குமார் விவசாயிகளின் மனுவை வாங்கவில்லை என கூறி விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின்போது விவசாயி ஒருவர் திடீரென தனது ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டார் உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி நிர்வாணமாக நின்ற விவசாயி மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்தனர் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.