மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாலக்கரை பகுதி, பாரதி நகர் கிளை சார்பில் திருச்சி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவெரம்பூர் 27 வது வார்டு பகுதிக்குட்பட்ட பாரதி நகர் மெயின் ரோடு, 3வது தெரு, 5வது தெரு, கோவிந்த கோனார் முதல் மற்றும் மூன்றாவது தெரு, இளங்கோ தெரு, அப்துல் குத்தூஸ் தெரு, முத்தையா சுவாமி தெரு, பட்டி கோனார் தெரு மற்றும் வள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளை சரி செய்து தரக் கோரியும்,
தெருவிளக்குகள், குடிநீர் மற்றும் சாக்கடை அடைப்புகளை மாநகராட்சி உடனடியாக சரி செய்து தரக் கோரியும், மணல்வாரி துறை ரோட்டில் உள்ள சுடுகாட்டில் மாலைப்பொழுதில் தகன மேடையில் இறுதி சடங்கை மேற்கொள்ள போதிய ஒளி வசதி இல்லாததால் மின்விளக்கை அமைத்திட கோருவது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கேட்டு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலையில் வாழை மரம் நடும் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்திற்கு கிளை செயலாளர் சோழராஜன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, பாலக்கரை பகுதி செயலாளர் சிவக்குமார், பாலக்கரை பகுதி குழு உறுப்பினர் சுரேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த வாழை மரம் நடும் போராட்டத்தை தொடர்ந்து ஆர்ப்பாட்ட இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இப்பகுதியில் சாலை வசதி, சாக்கடை, குடிநீர் மற்றும் தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதி களை சரி செய்து தருவதாக உத்தரவாதம் அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.