திருச்சி மாவட்ட மணல் மாட்டுவண்டி தொழிலாளர் சங்கம் சார்பில் கொள்ளிடம் ஆற்றில் மணல் மாட்டுவண்டி குவாரியை உடனே திறந்து விடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் ராமர் தலைமை தாங்கினார். மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சேகர் மற்றும் சிஐடியு புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த காத்திருப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட சிஐடியு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் கண்டன உரை நிகழ்த்தினார்.
இந்த காத்திருப்பு போராட்டத்தின் கோரிக்கைகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும், மாடுகளும் பட்டினியால் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கொள்ளிடமாற்றில் பல தலைமுறையாக மாட்டு வண்டியில் மணல் அள்ளும் தொழிலாளிக்கு அரசு தடை விதிக்க கூடாது எனவும், சிறிய கட்டுமான பணியை, விவசாய பணியை முடக்க கூடாது எனவும், மணல் மாட்டுவண்டி குவாரியை உடனே திறந்து விடக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.