திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து ஒவ்வொரு துறைவாரியாக அனுபவம் மிக்க மற்றும் பணியில் சிறப்பாக செயல்படும் அதிகாரிகளை தேர்ந்தெடுத்து முக்கிய பொறுப்புகளில் பணியமர்த்தி வருகிறது. அந்தவகையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டப் பஞ்சாயத்தைத் தடுக்க என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் எனக் கூறப்படும் காவல்துறை அதிகாரி எஸ்.பி வெள்ளத்துரை தலைமையில் சிறப்பு படை ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும், ரவுடிகளின் அட்டகாசத்தை குறைக்கும் வகையிலும் தமிழக காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த சிறப்பு படைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள வெள்ளத்துரை, ரவுடிகளை ஒடுக்குவதிலும், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும் சிறப்பாக செயல்பட்டவர் எனக் கூறப்படுகிறது. காவல்துறை மத்தியில் அவருக்கு நல்ல பெயர் இருப்பதால், அவரை இந்த படைக்கு பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ரவுடிகள் மத்தியிலும் வெள்ளத்துரை நன்கு பரிட்சையமானவராம். 2003 ஆம் ஆண்டில் பிரபல ரவுடி அயோத்திய குப்பம் வீரமணி, மதுரையில் சப் இன்ஸ்பெக்டர்களை குத்திய கவியரசு, முருகன் உள்ளிட்ட ரவுடிகளை எண்கவுண்டர் செய்ததில் முக்கிய பங்காற்றியவர் வெள்ளத்துரை எனக் கூறப்படுகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட ரவுடித் தனங்களை செய்பவர்களை இவரது தலைமையிலான சிறப்பு படை கவனிக்க உள்ளது. சில பகுதிகளில் ரவுடிகளின் அட்டகாசம் மேலோங்கத் தொடங்கி இருப்பதன் அடிப்படையிலேயே தமிழக காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.