தனிநபர் கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு வெளிகண்ட நாதர் திருக்கோயிலை இந்து சமய அறநிலையத்துறை மீட்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால். கூடிய விரைவில் ஆலயத்தை மீட்கும் போராட்டம் நடைபெறும் என – இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்கத்தின் நிறுவனரும் வழக்கறிஞருமான மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
திருச்சி, பாலக்கரை, உய்யகொண்டான் வாய்க்கால் கரையில் அருள் பாலிக்கும், ஸ்ரீ சுந்தரவள்ளி உடனுறை அருள்மிகு வெளிகண்ட நாதர் திருக்கோயில் பழமை வாய்ந்த சிவன் தலம் ஆகும். இந்த ஆலயத்திற்கு என்று பல சிறப்புகள் உள்ளது. இப்படி சிறப்பு கொண்ட இந்த திருத்தலத்தை பல நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக பல வரலாற்றுச் சான்றுகள் மூலம் தெரிய வருகிறது.
நூறு ஆண்டுகளுக்கு முன் அந்தப் பகுதியில் வசித்து வந்த வணிக சீமான், சிவ கோத்திரம், வேளாண் தொழில் மிராசுதார் சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினர் திருக்கோவிலில் நித்திய கால பூஜைகள் செய்து சிவபுராணம் பாடலை பாடி வெளிகண்ட நாதரை பூஜித்து வணங்கி வந்துள்ளார்கள். மேலும் வெளிகண்ட நாதருக்கு அபிஷேக ஆராதனைகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்கின்ற நல்மனம் படைத்த வேளாண் குடியில் பிறந்த மாமனிதர் குடும்பம் தினந்தோறும் சிவனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதற்கு என்று சொத்துகள் தானமாக வழங்கியுள்ளதாக அவரது வழிவந்த முன்னோர்கள் தெரிவித்த சான்றுக்கு ஆதாரங்கள் ஆலயத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளின் மூலம் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சிவன் சொத்தை கொள்ளையடிக்கும் ஒரு கும்பல் பல கல்வெட்டு ஆதாரங்களை சுயநலத்திற்காக அழித்துவிட்டதாக தற்போது தெரிய வருகிறது.
தற்போது இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்த திருக்கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு உண்டியல் வைக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் சிவனுக்கு செலுத்தவேண்டிய நிவர்த்தி கடன் நிறைவேற்ற முடியாமல் இன்று வரை தவித்து வருகின்றார். இப்படி உள்ள நிலையில் பாலக்கரை பகுதியில் வசித்து வரும் ஒரு நபர் அருள்மிகு வெளிகண்ட நாதர் திருக்கோயில் தனக்குத்தான் சொந்தமென்று ஊர் முழுவதும் உரிமை கொண்டாடி வருவதாக அப்பகுதி மக்கள் மனவேதனையுடன் தெரிவித்து வருகிறார்கள். இப்படி பழைமை வாய்ந்த சக்தி கொண்ட வெளிகண்ட நாதர் திருக்கோயிலை தனிநபர் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் புதிதாக ஆலய வளர்ச்சிக்கு ஒரு குழு அமைக்க வேண்டும். தனிநபர் ஆலயத்தை சொந்தம் கொண்டாடுவதற்கு இந்து சமய அறநிலைத்துறை எந்தவித அனுமதியும், எந்த ஒரு நபருக்கும் இதுவரை வழங்கவில்லை. ஆனால் பாலக்கரை பகுதியில் வசித்து வரும் நபர் சிவன் ஆலயத்தை உரிமை கொண்டாடி வருவது கண்டிக்கத்தக்கதாகும். மேலும் அருள்மிகு வெளிகண்ட நாதர் திருக்கோயிலை சொந்தம் கொண்டாடி கட்டுப்பாட்டில் வைத்துள்ள நபர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் சிவன் ஆலய சொத்தையும், ஆலயத்தையும் மீட்கும் மீட்பு போராட்டம் விரைவில் நடைபெறும் என இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்கத்தின் நிறுவனரும் வழக்கறிஞருமான மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.