திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுவதையொட்டி திருச்சி உறையூர் கைத்தறி மண்டபத்தில் 10- வது வார்டு திமுக வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில்:-
திருச்சியை பொருத்தவரை 65 வார்டுகளில் திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்று மாமன்ற உறுப்பினர்கள் ஆனால் அந்தந்த வார்டுகளில் உள்ள பிரச்சினைகளை அவர்களே தீர்த்து வைப்பார்கள். அத்தகைய அரிய வாய்ப்பை நம்முடைய அணியில் உள்ள அனைத்து வேட்பாளர்களும் பெற்றிருக்கிறார்கள். ஆகவே அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள். குறிப்பாக சென்னை 200 வார்டுகள் கொண்ட பெரிய நகரமாக உள்ளது. ஆனால் அதிகமாக பேசப்படுவது திருச்சி மாநகரம் தான். மேலும் சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை என எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். ஆனால் அமைச்சர் கே என் நேருவின் சிறப்பான பணியால் சேலம் மாவட்டத்தில் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஆகிய அனைத்திலும் நமது வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். அதிலும் பாஜக தனித்து நிற்கிறது, அதிமுக தனித்து நிற்கிறது, பாமக தனித்து நிற்கிறது, தேமுதிக முன்னாடியே தனித்து போய்விட்டது. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் உள்ள ஒரு காட்சி கூட விலகவில்லை இதுவே இந்த அணிக்கு கிடைத்திருக்கிற மகத்தான வெற்றி என்பதை உணர்ந்து அரசியல் ரீதியாக நம்முடைய அணி வெற்றி பெற செய்யுங்கள் என பேசினார். இந்த பிரச்சாரத்தின் போது மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், தில்லை நகர் பகுதி செயலாளர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.