தமிழகத்தில் நடந்தது முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது கள்ள ஓட்டு போட முயன்ற திமுக பிரமுகரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் திமுக பிரமுகரை தாக்கி அதிகாரத்தை கையில் எடுத்ததாக கூறி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதன் ஒரு பகுதியாக திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி, ஆகியோர் தலைமையில் இன்று நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கழக அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், வளர்மதி முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், சிவபதி, மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன், துணை செயலாளர் வனிதா, மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.