புற்று நோயால் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கு காவிரி மருத்துவ மனையில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள காவிரி மருத்துவமனையில் நடைபெற்றது.
திருச்சி காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர், செயல் இயக்குனர் மற்றும் குழந்தைகள் நலத் துறையின் தலைவருமான டாக்டர் செங்குட்டுவன் கூறுகையில், திருச்சி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் குழந்தைகளுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்வது இதுவே முதல் முறையாகும், ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவனுக்கு கீமோதெரபி சிகிச்சை பலனளிக்காத நிலையில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது 8 வயது சகோதரி ஸ்டெம் செல்களை தானம் செய்தார். தற்போது இருவரும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர்.
இதேபோல் ரிப்ராக்டரி ஹாட்ஜ்கின் லிம்போமா என்ற வகை புற்றுநோய் கொண்ட 14 வயது சிறுமிக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குழந்தையின் சொந்த ஸ்டெம் செல்களை எடுத்து பதப்படுத்தப்பட்ட பின்னர் எலும்பு மஞ்சை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இன்று வரை சிறுமி இயல்பாக உள்ளார். திருச்சி காவேரி மருத்துவமனையில் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பிரத்தியேக பிரிவு 2018 தொடங்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர் ரத்தம் சம்பந்தமான பாதிப்பு உள்ள குழந்தைகள் பலரும் இதுவரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர் என தெரிவித்தார்.