திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைப்பெற்ற கவுன்சில் கூட்டத்தை துணைத்தலைவர் புறக்கணித்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி லால்குடி தேர்வு நிலை பேரூராட்சியாக இருந்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதன் முறையாக நகராட்சி தேர்தலை சந்தித்தது. 24 வார்டுகள் கொண்ட லால்குடி நகராட்சி உள்ளாட்சி தேர்தலில் திமுக 17 இடங்களிலும் இதன் கூட்டணி கட்சி ஒரு இடத்தையும் அதிமுக 4 இடங்களிலும், சுயோட்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
இதில் திமுக பெருண்மை பெற்று நகராட்சியை கைப்பற்றியது. தற்போது லால்குடி நகராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த நகர செயலாளர் துரை மாணிக்கமும், துணைத்தலைவராக திமுகவை சேர்ந்த சுகுணா ராஜ்மோகனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் லால்குடி நகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது தலைவர் துரை மாணிக்கத்திற்கு மேடையில் இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு இருந்தது. துணைத்தலைவர் சுகுணாவுக்கு இருக்கை வசதி அளிக்கப்படாமல், கவுன்சிலர்களோடு அமர்ந்திருக்கும் வகையில் கூட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை கண்டித்து துணைத்தலைவர் சுகுணா, தனக்கும் நகராட்சித் தலைவர் அருகிலேயே இருக்கை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பேசினார்.
ஆனால் இதற்கு உரிய பதில் கிடைக்காததை கண்டித்து சுகுணா நகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். நகராட்சி தி.மு.க துணைத் தலைவவரே கவுன்சில் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தது லால்குடி நகராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் கமிஷனரை சந்தித்த சுகுணா தனக்கு மேடையில் இருக்கை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தார்.