திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஓமைக்ரான் வைரசால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு தயார் நிலையில் உள்ளது.
இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனையின் டீன் வனிதா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்.:-
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் ஓமைக்ரான் பரிசோதனை குறித்து தீவிர ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஓமிக்ரான் வைரசால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க 32 படுக்கைகள் கொண்ட தனி வார்டு தயார் நிலையில் உள்ளது. இந்த ஓமைக்ரான் சிகிச்சைப்பிரிவில் ஐசியு க்கு என தனியா 8 படுக்கைகளும், மீதம் உள்ள பெட்கள் அனைத்தும் ஆக்சிசன் வென்டிலேட்டர் வசதி கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு 10.45 மணி அளவில் சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணி ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து அவரது சளியின் மாதிரி சென்னையில் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. தற்போது அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள ஓமைக்ரான் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர கண்காணிப்பில் உள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கடந்த கொரோனா முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை பரவலை விட தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் ஓமைக்ரான் வைரஸ் கொடிய தொற்று நோயாக உள்ளது. இந்த நோய் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் கைகளை சுத்தமாக வைத்திருத்தல் முக கவசம் அணிவது போன்றவற்றை முறையாக கடைபிடித்தால் நோயிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.