திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் இரண்டாவது நாளாக இன்று காலை 10:30 மணி அளவில் கையெழுத்திட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் போட்ட பொய் வழக்கு காரணமாக மேலாண்மை நீதிமன்றம் எனக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி இதனடிப்படையில் இன்று இரண்டாவது நாளாக திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு இருக்கிறேன். இந்த விடியா தி.மு.க. அரசுக்கு தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வக்கில்லை. தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இருக்கக்கூடாது என நினைக்கிறார்கள். குறிப்பாக அ.தி.மு.க.வை ஒழித்துக்கட்ட வேண்டும் என கங்கனம் கட்டிக்கொண்டு கழக முன்னாள் அமைச்சர்கள், முன்னோடிகள் கழகத் தொண்டர்கள் மீது பொய் வழக்கு போட்டு வருகிறார்கள். இந்த இயக்கத்தை அழித்து விடலாம் என்ற இறுமாப்பில் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இந்த ஒன்பது மாத கால ஆட்சியில் கிஞ்சிற்றும் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. உதாரணமாக கடந்த ஜெயலலிதா ஆட்சியில் திருச்சி மாநகரில் ரூ. ஆயிரம் கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டு வரப்பட்டது. 2019 முதல் திட்டப் பணிகள் சிறப்பாக நடந்து வந்தன. இப்போது அந்தப் பணிகள் நத்தை வேகத்தில் நடக்கின்றன. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இந்த ஆட்சியாளர்களிடம் மக்கள் எதிர்பார்ப்பது அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும். வாக் குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற தான் எதிர் பார்க்கிறார்கள். 1972ல் எம்ஜிஆர் இந்த இயக்கத்தை உருவாக்கிய போது சொல்ல முடியாத அளவுக்கு பெரும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன .ஆட்சிக்கு வரவிடாமல் பல வழக்குகளை போட்டார்கள். அதையெல்லாம் மீறி எம்ஜிஆரை மக்கள் முதல்வராக தேர்ந் தெடுத்தார்கள். முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டிலிருந்து கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தவறான விஷமப் பிரச்சாரம் செய்கிறார்கள். திரும்பத் திரும்ப அதை சொல்லும்போது இயக்கம் மீது மக்களுக்கு கெட்ட பெயர் உருவாகும் என்று நினைக்கிறார்கள். நான் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றுதான் நீதிமன்றம் எனக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. பேட்டி அளிக்க கூடாது என்று சொல்ல வில்லை. என்னை மட்டுமல்ல ஒன்றரை கோடி தொண்டர்களையும் ,தமிழக மக்களின் வாயையும் மு க ஸ்டாலின் ஆல் மூட இயலாது . முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்தது.எத்தனை வழக்கு போட்டாலும் சரி அதற்கு அதிமுக தொண்டர்கள் அஞ்ச மாட்டார்கள். நீதிமன்றத்தின் மூலம் நீதியை நிலைநாட்டுவோம் .அடுத்த பிரதமர் முகஸ்டாலின் என்று சொல்கிறார்களே என கேட்டதற்கு, இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த ஜோக் என பதிலளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *