அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு, அக்கட்சியின் முதல் மாநில மாநாடு மதுரை ரிங் ரோடு, கருப்பசாமி கோயில் எதிரே உள்ள திடலில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன் தலைமையில், திருச்சி மாநகர் மாவட்ட கழக அதிமுகவினரின் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் 4 சக்கர வாகனங்களில் மாநாட்டிற்கான இலட்சினை ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி இன்று துவங்கியது.
இதன் மூலம் மதுரை மாநாட்டிற்கு திருச்சி அதிமுகவினர் அழைப்பு விடுத்து வருகின்றனர். மதுரையில் நடைபெறும் மாநாட்டில் திருச்சி அதிமுகவினர் குடும்பமாக கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் ஐயப்பன், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் வனிதா, பகுதி கழகச் செயலாளர்கள் அன்பழகன், கலைவாணன், கவுன்சிலர் அம்பிகாபதி உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.