திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை நாகமங்கலம் சாலையில் உள்ள பழைய இரும்பு கடை அருகே சாலையின் கிழக்கு புற ஓரமாக சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் மூச்சு திணறுடன் உடல்நிலை சரியில்லாமல் கிடந்தார். மேற்படி நபரை பற்றி விசாரிக்கையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கண்ணா தெருவை சேர்ந்த அப்துல்லா மகன் முகமது இஸ்மாயில் என்றும் தனக்கு உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் குப்பையினை பொறுக்கி விற்பனை செய்து வருவதாக கூறினார். உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் மேற்படி நபரை திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உள் நோயாளியாக சிகிச்சையில் இருந்து வந்த நபர் 19ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

 மேற்படி நபரின் உடல் கூராய்வு செய்யப்பட்ட நிலையில் யாரும் உரிமை கோரவில்லை. அந்நிலையில் திருச்சி மணிகண்டன் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு பிரிவு இரண்டாம் நிலை காவலர் சற்குணன் நல்லடக்கம் செய்வதற்காக திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் இரண்டாம் நிலை காவலர் சற்குணன் முன்னிலையில் திருச்சி குழுமிக்கரை மயானத்தில் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு செய்து யோகா ஆசிரியர் விஜயகுமார் நல்லடக்கம் செய்தார். இதுபோல் தொடர்ந்து அனாதையாக இறப்பவர்களின் உடல்களுக்கு உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வரும் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு பொதுமக்கள் மத்தியில் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *