தமிழ்நாடு அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் “வெறுப்பு அரசியலை வேரறுப்போம்” என்னும் தலைப்பில் மாபெரும் கவனயீர்ப்பு மாநாடு கூட்டமைப்பின் தலைவர் மௌலானா காஜா முயீனுத்தீன் பாகவி ஹஜ்ரத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் சசிகாந்த் செந்தில் IAS, ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் நிறுவனர் சிவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் மற்றும் தமிழ் மையம் அமைப்பின் நிறுவனர் அருட்தந்தை ஜெகத் கஸ்பர் ராஜ் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினர்.

மேலும் தமுமுக மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் MLA, மமக பொதுச் செயலாளர் அப்துல் சமது MLA,எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ஹமீத் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மௌலானா மன்சூர் காஷிஃபி,பஷீர் அஹமது ,பாப்பலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாநில செயலாளர் முகம்மது ரசீன், INTJமாநிலத் தலைவர் பாக்கர், மில்லி கவுன்சில் தமிழ் மாநில தலைவர் இப்னு சவூத், IUMLதேசிய பொதுக்குழு உறுப்பினர் ஹபீபுர் ரஹ்மான் ஆகியோர் பங்கேற்று உரை நிகழ்த்தினர்.

இந்த மாநாட்டில் ல் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

1 மதத்தின் பெயரால் மக்களைக் கூறுபோடும் மதவெறி பிடித்த சங்பரிவார கும்பலின் வெறுப்பு அரசியலை வேரறுக்க சமூகமும், ஊடகங்களும், நீதித்துறை உள்ளிட்ட ஜனநாயக நிறுவனங்களும், அரசாங்கமும் ஒத்த உணர்வோடு ஓரணியில் நின்று பணியாற்ற வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.2, அகிலங்களின் அருட்கொடையாம், அமைதி வாழ்வின் வழிகாட்டியாம் அண்ணல் நபிகள் நாயகத்தைக் குறித்து தனியார் தொலைக்கட்சி விவாதத்தில் அவதூறாகப் பேசிய பாஜகவின் நுபுர் ஷர்மாவையும், அக்கழிசடைப் பேச்சை முகநூலில் பதிவிட்ட பாஜகவின் நவீன் ஜிண்டாலையும் பாஜக முதலில் பாராட்டியது. உலக நாடுகளின் பேரெதிர்ப்பால் சரணாகதி அடைந்த மோடி அரசும், அதை நடத்தும் பாஜக சங்பரிவாரமும் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி நடவடிக்கை என்ற பெயரில் கபட நாடகம் ஆடுகின்றன. இவர்களை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும் என்பதே நாட்டு மக்களின் கோரிக்கையாக உள்ளது. முஸ்லிம்களையும் தலித்துகளையும் ஒடுக்குவதற்காகவே பயன்படுத்தப்பட்டு வரும் UAPA சட்டம் சங்பரிவார விஷமிகள் மீது பாயாதென்றால் அச்சட்டத்தையே ரத்து செய்யவேண்டும் என்று இம்மாநாடு கோருகிறது.

3, முஸ்லிம்களின் உயிரினும் உயர்ந்த இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களை அவதூறாகப் பேசி, அமைதியைக் குலைத்து நாட்டைக் கலவரக் காடாக்கி அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேடவேண்டும் என்பது சங்பரிவார மற்றும் பாஜகவின் சதித்திட்டமாகும். இதை எல்லா மக்களும் ஒன்றாக ஓரணியில் நின்று எதிர்கொள்ள வேண்டும். உணர்ச்சிகளுக்கு இடம்கொடுத்து சங்கிகள் விரிக்கும் சதிவலையில் ஒருபோதும் நாட்டை நேசிக்கும் மக்கள் விழுந்துவிடக் கூடாது என்று இம்மாநாடு எச்சரிக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பொது துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்தல், கொரோனா முழு அடைப்பு குளறுபடிகள், அருணாச்சல் பிரதேசத்தில் சீன ஆக்கிரமிப்பு என மிக மோசமான நிர்வாக சீர்கேட்டை மறைப்பதற்காக ஒன்றிய பாஜக அரசு சிறுபான்மையினர்களுக்கு எதிரான வெறுப்பரசியலை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இச்சூழலில் நாட்டை நேசிக்கும் அனைவரும் ஜனநாயக வழியில் ஒன்றிணைந்து ஃபாசிச சதிகளை முறியடிக்கின்ற கடமையும் பொறுப்பும் அனைவருக்கும் உள்ளது என்பதை இம்மாநாடு வலியுறுத்துகின்றது. 4, சமூக நல்லிணக்கம் தழைத்தோங்குகின்ற அமைதிப் பூங்காவான தமிழகத்தை அமளிக்காடாக்கும் வகையில் மதவாத பாசிஸ்டுகள் வெறுப்பு நெருப்பை விசிறிவிட்டு வளர்க்கும் வகையில் ஆங்காங்கே பேசி வருவதை இம்மாநாடு கவலையோடு கவனப்படுத்துகின்றது. மதவெறித் தூண்டி சமூக அமைதியைக் குலைக்கின்ற நச்சுப் பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீரமானம் நிறைவேற்றுவதுடன் தமிழக அரசு மத வன்முறை தடுப்புச் சட்டத்தை இயற்றி அமைதியைப் பாழ்படுத்தும் பாசிஸ்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

இந்த கவனயீர்ப்பு மாநாட்டில் ஜமாத்துல் உலமா சபையின் நிர்வாகிகள், உலமாப் பெருமக்கள், அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்,ஜமாத் நிர்வாகிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *