திருச்சியில், த.மா.கா., தலைவர் ஜி கே வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:நாம் காலம் தாழ்த்தாமல் கடமையை செய்வதற்கு, வந்தே பாரத் ரயிலில் சேவை உள்ளது. திருவண்ணாமலையில், விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்ட வழக்குகளை, அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும். சம்பா சாகுபடி பொய்த்துப் போனதால், மேட்டூர் பாசனத்தில் விவசாயம் செய்யும் நிலப்பரப்பை வறட்சிப்பகுதியாக அறிவிக்க வேண்டும், என்று விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். அரசு சார்பில், பயிர்க்காப்பீடுக்கு தனி நிதி ஒதுக்கீடு செய்து, நிறுவனத்தை நிறுவி விவசாயிகளை பாதுகாக்கும் ஆக்கப்பூர்வமான பணியை செய்ய வேண்டும். தி.மு.க., கூட்டணியினர் ஓரணியில் இருப்பதாக கூறுகின்றனர். த.மா.கா., பா.ம.க., தே.மு.தி.க., போன்றவை கூட்டணி இறுதி முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும், எதிரியை வீழத்தக்கூடிய சரியான நிலையை ஏற்படுத்த த.மா.கா., முயற்சிக்கும். த.மா.கா., சார்பில், மக்கள் சந்திப்பை அதிகரித்து வருகிறேன். வரும் 25ம் தேதி திருநெல்வேலி செல்கிறேன். டிச. 3ம் தேதி விழுப்புரத்திலும், 10ம் தேதி தர்மபுரியிலும், 17 ம் தேதி கோவையிலும், மண்டல கூட்டம் நடத்தப்பட உள்ளது.
ரவுடியை சுட்டுக் கொல்வது சரி தவறு என்ற சொல்லி விட முடியாது. போலீசாருக்கு ஏன் அத்தகைய நிர்ப்பந்தம் ஏற்பட்டது, என்பது விசாரணை மூலம் தெரியும். சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம்– ஒழுங்கு பல ஆண்டுகளாக கேள்விக்குறியாகவே உள்ளது. கொலை, கொள்ளை, போதைப்பொருள் விற்பனை, பாலியல் குற்றங்கள் தொடர்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அரசின் கடமை. இந்தியாவில் பல மாநிலங்களில் ஆட்சியாளர்களும், கவர்னர்களும் ஒத்த கருத்தோடு செயல்பட்டு வருகின்றனர். அவரவர்களுக்கான பணியும் வரையறை செய்யப்பட்டுள்ளது. மக்கள் நலன், மாநிலத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இரண்டு தரப்பிலும், அரசியலோ காழ்ப்புணர்ச்சியோ இருக்கக் கூடாது. மக்களுக்கு தேவையான நன்மை பயக்கும் திட்டங்களை ஒரு காலக் கெடுவுக்குள் நிறைவேற்ற வேண்டும். சாலை விபத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஒருசேர உறுதிமொழி எடுக்க வேண்டும்.
உயிர் தான் முக்கியமானது. உயிர் இருந்தால் மட்டுமே சாதிக்க வேண்டியதை சாதிக்க முடியும். அதை உணர்ந்து மாணவர்கள் செயல்பட வேண்டும். அரசாங்கத்தை பொருத்தவரை, பல வாக்குறுதிகள் கொடுக்கின்றனர். அதில் பெரும்பாலான வாக்குறுதிகளை செயல்படுத்துவதில்லை.மக்கள் வரிப்பணத்தில் இலவசமாக ஏதேதோ செய்யும் அரசு, மாணவர்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றுவதற்கு அரசு போக்குவரத்துத் துறை தரப்பில், அனைத்து பஸ்களிலும் கதவு கட்டாயம் என்ற முடிவை உடனடியாக எடுக்க வேண்டும். மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதிலும் பாகுபாடு காட்டுகின்றனர். மாணவர்களின் உயிரைக் காக்கும் பணியை ஏன் அரசு செய்யக் கூடாது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.