தமிழகத்தில் முதன் முறையாக திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், தமிழ் நங்கை எனும் பெயரில் திருநங்கைகள் நடத்தும் இ- சேவை மையம் மற்றும் பழச்சாறு நிலையத்தினை நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து அகில இந்திய திருநங்கைகள் உரிமை மறுவாழ்வு மையத்தின் தலைவர் மோகனா அம்மா நாயக் அமைச்சர் கே என் நேருவிடம் கோரிக்கை வைத்தார். அதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு இலவச வீடுகள் கட்டித் தர வேண்டும் எனவும், அதேபோல் எட்டு திருநங்கைகள் ஒன்றிணைந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உணவகத்தை ஆரம்பிக்க உள்ளனர். அதற்கான இடத்தை தேர்வு செய்து தரும்படியும், மேலும் திருநங்கைகளுக்கு என நடத்தப்படும் உலக அழகி போட்டியை திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடத்துவதற்கு அனுமதி தர வேண்டும் எனவும் கோரிக்கையை முன் வைத்தார்.

அதனைத் தொடர்ந்து திருநங்கைகளின் வாழ்வில் முன்னேற்றம் அடைய செய்வதற்காக திருநங்கைகளுக்கு என தனியாக உள்ள 2- சுய உதவிக் குழுக்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்ட திருநங்கைக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சூரிய சக்தி மூலம் செயல்படுத்தப்படும் ஜெராக்ஸ் கடையை அமிர்தா என்ற திருநங்கைக்கும், பழக்கடையை ஜெசிகா என்ற திருநங்கைக்கும் வழங்கப்பட்டுள்ளது.

 இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, மாவட்ட ஊராட்சித் தலைவர் இராஜேந்திரன், நபார்டு உதவி பொது மேலாளர் மோகன் கார்த்திக், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( வேளாண்மை) மல்லிகா மற்றும் மாநகராட்சி மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *