தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 18 ஜோடிகளுக்கு சமயபுரம் கோயிலில் இன்று இலவச திருமணங்கள் நடைபெற்றது. ஆண்டு தோறும் 500 ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், அனைத்து திருக்கோயில்களில் இலவச திருமணங்கள் நடத்தப்படும் என 2022 – 23 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

திருமணத்திற்கான செலவுகளையும் திருக்கோயில்கள் நிர்வாகமே ஏற்கும் என, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார். அதன்படி, ஒரு இணை ஆணையர் மண்டலத்தில் 25 ஜோடிகள் வீதம் மாநிலம் முழுவதும் உள்ள 20 இணை ஆணையர் மண்டலங்களில் 500 ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் அனைத்து இணை ஆணையர் மண்டலங்களிலும் திருமணங்கள் இன்று நடைபெற்றது.

இந்நிலையில் திருச்சி இணை ஆணையர் மண்டலத்துக்கு உட்பட்ட திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 18 ஜோடிகளுக்கு திருச்சி, சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் இன்று நடைபெற்ற திருமண நிகழ்வினை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி திருமணங்களை நடத்தி வைத்தார். மணமக்களுக்கு 3 கிராம் தாலி தங்கம் மற்றும் திருமணத்திற்கு வழங்கும் அனைத்து சீர்வரிசைப் பொருட்களும், வழங்கினர். மணவிழாவில் பங்கேற்கும் உறவினர்கள் சுமார் 500 பேருக்கு உணவுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன், சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி அரசு அதிகாரிகள், கோயில் பணியாளர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *