திருச்சி மேற்கு தொகுதியில் திமுக சார்பில், சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சராக இருப்பவர் கே.என் நேரு. இவரது தொகுதிக்கு உட்பட்ட கருமண்டபம் 56-வது வார்டு பகுதிகளில் தார் சாலைகள் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இளங்காட்டு மாரியம்மன் கோவில் எதிரே உள்ள திருநகர் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. ஆனால் சாலையை முழுமையாகப் போடாமல் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதிலும், காண்ட்ராக்டர்கள், அதிகாரிகள் அலட்சிய போக்கை காட்டும் வகையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை அப்புறப்படுத்தாமல் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது .

அதிலும், திமுக அமைச்சர் கே.என் நேரு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மக்களிடையே மிகுந்த மன வருத்தத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் இப்பகுதிகளில் முழுமையாக சாலைகள் போடப்படாமல் ஒரு சில பகுதிகள் மட்டுமே தார் சாலை பணி நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், திருச்சி மாநகராட்சி திமுக மேயர், ஆணையர் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்து, தரமான சாலையை முழுமையாக அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீப காலமாக அமைச்சர் கே என் நேருவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் திருச்சி எம்எல்ஏக்கள் நடந்து வருகின்றனர் சமீபத்தில் ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி ஆடியோ கால் சர்ச்சை ஏற்படுத்தியது, அதனைத் தொடர்ந்து லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் தனக்குத்தானே இரங்கல் தெரிவித்து லால்குடி தொகுதி காலியாக இருப்பதாக பேஸ்புக்கில் பதிவிட்டு சர்ச்சையாகி இருந்தது. அந்த வகையில் அமைச்சரின் தொகுதி என்று அதிகாரிகளுக்கு தெரிந்தும் அதனை கண்டு கொள்ளாமல் கார் நிறுத்தப்பட்ட இடத்தை விட்டுவிட்டு தார் சாலை அமைத்த அதிகாரிகள், கவுன்சிலர் மற்றும் திமுக நிர்வாகிகளின் செயலால் மீண்டும் அமைச்சர் கே‌.என் நேருக்கு மக்கள் மத்தியில் அவபெயர் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *